Breaking

Saturday, July 14, 2018

இந்தியாவின் கேடயம் (A.P.J. அப்துல் கலாம்)

பாரதத் தாயின் கடைக்கோடி
          ஊரில் பிறந்த தலைமகனே!
பார தத்தை முழுதாண்ட
          மூத்த முதன்மைக் குடிமகனே!

அலைகள் வீசும் நிலப்பரப்பில்
          நாட்டின் கடைசி ஓரத்தில்
வலைகள் வீசும் குடிப்பிறந்து
          வறுமை வாட்ட வாழ்ந்தவரே!

சிறகு விரித்த தலைமுடியும்
          சிரிப்புத் தவழும் முகதொணியும்
அறிவு களஞ்சிய மாய்இருக்கும்
          உனது உருவம் காட்டிடுமே.

பிறப்பு சம்பவ மானாலும்
          இறப்புச் சரித்திரம் வேண்டுமென்றீர்!
பிறப்புச் சரித்திரம் படைத்தவரே
          இறவாப் புகழினைப் பெற்றுவிட்டீர்!

இந்தி யாவின் கேடயமாய்
          இருந்து நாட்டைக் காத்துநின்றீர்
அணுவியல் துறையில் புரட்சிசெய்து
          அன்னிய நாட்டை மிரட்டிவைத்தீர்.

நாட்டுக் காக உழைத்ததினால்
          இரண்டாம் காந்தி நீர்ஆனீர்
கோட்டைச் சென்றும் பணிவுகொண்டு
          அனைவர் நெஞ்சிலும் வாழ்கின்றீர்

அன்பு இரக்கம் கொன்டவர்நீர்
          அமைதி யாக இருந்தவர்நீர்
புன்னகை தவழும் முகங்கொண்டு
          அனைவ ரிடத்தும் உறவுகொண்டீர்

இந்திய நாட்டை வல்லரசாய்
          மாற்ற கனவு கண்டவரே
இந்திய நாடும் வால்லரசாய்
          மாறும் நம்பிக்கைத் தருகின்றோம்

அக்னி ஏவு கணைதந்தீர்
          அணுவா யுதத்தை வடிவமைத்தீர்
ஏவு கணைகள் சோதித்து
          அன்னிய நாட்டை எச்சரித்தீர்

இந்திய நாடு ஊழலிலே
          மூழ்கி டாமல் காத்திடவே
இந்திய இளைஞர் படைதிரட்டி
          இன்னல் தீர்க்க வழிசொன்னீர்.

உங்கள் வார்த்தை அரங்கேற்றம்
          மாணவர் மேடையில் முழங்கியதே
உங்கள் பேச்சு அத்தனையும்
          இளைஞர் வளர்ச்சி நோக்கியதே

உங்கள் மொழிகள் தலைக்கொண்டு
          நாங்கள் உழைக்க முயல்கின்றோம்
தாங்கள் நினைத்த காலத்தில்
          நாட்டை உயர்ந்திக் காட்டிடுவோம்.

Pages